எஸ்.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச பயிற்சிகலெக்டர் தகவல்

எஸ்.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்கள் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-11 20:18 GMT

இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

11 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி http://ssc.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். தேர்வு முறையானது கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தரநிலை சோதனை (ஹவால்டர் பதவிக்கு மட்டும்). ஆவணம் சரிபார்ப்பு ஆகிய மூன்று முறைகளில் நடைபெற உள்ளது.

பயிற்சி கட்டணம்

இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். எனவே மேற்கண்ட தேர்வு எழுதுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இலவச பயிற்சி பெற www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்