பாரம்பரிய நெல் சாகுபடி முறையில் விவசாயிகள் பயிரிட வேண்டும்

விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-24 17:36 GMT
விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பாரம்பரிய விவசாயம்

விவசாயம் நிறைந்த இம்மண்ணில் பாரம்பரிய நெல் விவசாயம் என்பது சமீபகாலத்தில் குறைந்து வந்த நிலையில் அரசு வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொண்ட சீரிய திட்டத்தால் தற்போது பல்வேறு இடங்களில் விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தை தொடங்கி உள்ளார்கள். அன்றைய காலக்கட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் முன்னோர்கள் நீண்டகால நெல் வகைகளை தேர்வு செய்து பயிரிட்டு அதன் பராமரிப்பு பணிக்காக இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தி அதன் மூலம் அதிக மகசூல் பெற்றார்கள். இந்த நெல்லில் இருந்து கிடைக்கக்கூடிய அரிசியானது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தந்தது.

சமீபகாலங்களாக குறுகிய கால விவசாயத்தை விவசாயிகள் கையில் எடுத்துக்கொண்டு பயிரிட்டதால் உணவில் இயற்கையான தரம் குறைவதுடன், உடலுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகளை உருவாக்கி வந்தது மட்டுமன்றி, ஒவ்வொரு முறை பயிரிடும் போது நிலத்தை சீரமைப்பது பெரிய பணியாக இருந்து வருகின்றது. இந்த நிலை மாறி மீண்டும் நம் முன்னோர்களால் செயல்படுத்தி வந்த பாரம்பரிய நெல் சாகுபடியினை விவசாயிகள் பயிரிட்டு, விளைநிலத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

இயற்கை விவசாயம்

நடப்பாண்டில் அரசு வழிகாட்டுதலின்படி, வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆலோசனை பெற்று விவசாயிகள் ஆத்தூர் கிச்சடி சம்பா, குழவாழை, தூயமல்லி, பூங்கார் ஆகிய பராம்பரிய ரகங்களை பயிரிட்டு நல்ல மகசூல் பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதேபோல் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

அதன்படி, இயற்கை விவசாயம் மூலம் அதிக லாபம் பெறும் பாரம்பரிய நெல் சாகுபடி முறையினை விவசாயிகள் கையாண்டு, அதன் மூலம் லாபம் ஈட்டி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்