வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு

வாலாஜா ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-06-13 18:16 GMT

கலெக்டர் ஆய்வு

வாலாஜா ஒன்றியம் வீ.சி. மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பாக குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 புதிய வகுப்பறை கட்டும் பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கழிவறை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

அப்போது வருகை பதிவேட்டில் குழந்தைகள் விவரம் சரியாக பதியப்பட்டுள்ளதா, கர்ப்பினி தாய்மார்கள் முறையாக பரிசோதனைக்கு வருகிறார்களா என அங்கன்வாடி பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் வாசித்தல் திறனை ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வகுப்பறை

வன்னிவேடு மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடையிலும் ஆய்வு மேற்கொண்டு அரிசி உள்ளிட்ட பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என மைய பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார்.

வன்னிவேடு ஊராட்சியில் நடைபெறும் அங்கன்வாடி மைய கட்டிட பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையற் கூடம் சீரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். குடிமல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, திருமலைச்சேரி ஊராட்சியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, பூண்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணி தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மாணவர் சேர்க்கை

பள்ளியில் தற்போது வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகள் விவரங்களை கேட்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து முசிறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி தாய்மார்களிடம் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் முனிசாமி, பணி மேற்பார்வையாளர்கள் சுமதி, கபிலன், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்