காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.;
கரூர்,
க.பரமத்தி, அரவக்குறிச்சி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியங்களுக்காக செவ்வந்திபாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் சேமங்கியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:- கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் 10 கிராம பஞ்சாயத்துகள் காவிரி ஆற்று படுகை அருகில் அமைந்துள்ளன. இதில் 6 கிராம பஞ்சாயத்துகளுக்கான குடிநீர் ஆதாரம் மணல் குவாரிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி மணல் குவாரியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். மீதமுள்ள கிராம ஊராட்சிகளில் மண்மங்கலம், புஞ்சைகடம்பங்குறிச்சி, நன்னியூர், நெரூர் வடக்கு மற்றும் நெரூர் தெற்கு ஆகியன மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன. மணல் குவாரியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பதற்கு மாவட்ட கனிமவள துறையினால் நிதி வழங்கப்பட்டு அதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதற்கட்ட பணியாக ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், புஞ்சை கடம்பங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டிக்கு 140 மி.மீ மற்றும் 160 மி.மீ குழாய்கள் மூலம் நீர் ஏற்றப்படும். திட்டசெயலாக்கப் பணிகள் 97 சதவீதம் முடிவுற்று, நடைபெற்று வருகிறது. என்றார்.