தேர்வுக்கு தயாராவது எப்படி? பிளஸ்-2 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் அரவிந்த்

தேர்வுக்கு தயாராவது எப்படி? என்பது குறித்து நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் அரவிந்த் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

Update: 2022-07-08 18:21 GMT

நாகர்கோவில்,

தேர்வுக்கு தயாராவது எப்படி? என்பது குறித்து நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் அரவிந்த் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வேலவன் முன்னிலை வகித்தார். இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பிளஸ்-2 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு கலெக்டர் அரவிந்த் பதிலளித்தார்.

அவ்வப்போது தன்னுடைய பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவம் மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற அனுபவம் ஆகியவை குறித்து மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நேரத்தை வீணடிக்காமல் எவ்வாறு படிப்பது? தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

பைலட் ஆக முடியுமா?

மாணவி ஒருவர் பேசும்போது, தான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவதாகவும், இரவு 11 மணிக்குத்தான் தூங்க செல்வதாகவும் கூறினார். உடனே குறுக்கிட்ட கலெக்டர், அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் மாணவி இரவு 11 மணி வரை கண் விழித்து இருப்பது உடல் நலனை பாதிக்கும். மன அழுத்தத்தையும் உருவாக்கும். எனவே ஓய்வு எடுக்க வேண்டும். காலை 6 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும். தேர்வு நேரங்களில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிப்பது நல்லது. தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்றார்.

நாகர்கோவிலில் உள்ள பஸ் நிலையங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவி ஒருவர் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த கலெக்டர், குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு கூறினார். பிளஸ்-2 ஒக்கேசனல் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவை எடுத்து படிக்கும் மாணவர் ஒருவர், தான் படிக்கும் பாடப்பிரிவு மூலமாக உயர்கல்வியில் விமானி ஆக பயிற்சி பெற முடியுமா? என்று கேட்டார். அதற்கு கலெக்டர் அரவிந்த், முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தியை பதில் அளிக்குமாறு கூறினார். அவர் பேசும்போது, விமானி ஆக வேண்டும் என்றால் இயற்பியல் பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும். பிளஸ்-2-க்கு பிறகு இயற்பியல் தொடர்புடைய படிப்பை திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பயின்றுவிட்டு, விமானி தொடர்பான படிப்புக்குச் செல்லலாம் என்றார்.

கலெக்டர் அரவிந்த் தங்களுடன் கலந்துரையாடி பல்வேறு தகவல்களையும், அறிவுரைகளையும் வழங்கியது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என மாணவ- மாணவிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்