தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத்திட்ட பணிகள் குறித்து மானியத அள்ளி கிராமத்தில் கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு நடத்தினார்.
வேளாண் அடுக்கு திட்டம்
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெறுவதற்காக வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, விதை சான்றிப்பு துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக கிரைன்ஸ் என்ற வலைதளத்தில் விவசாயிகளின் நிலஉடைமை உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நல்லம்பள்ளி அருகே உள்ள மானியதள்ளி கிராமத்தில் வேளாண் அடுக்குத்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது கிரைன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, வங்கி புத்தக நகல், விவசாயிகளின் புகைப்படம் செல்போன் எண் ஆகியவற்றை விவசாயிகள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மானிய விலையில்
அப்போது கலைஞரின் அனைத்து கிராம அண்ணா ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கள ஆய்வு செய்த கலெக்டர் 2 விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை தெளிப்பான் மற்றும் தார்ப்பாய்களை வழங்கினார்.
முன்னதாக பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து சிகிச்சை பெற வந்தவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மாலினி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன், வேளாண்உதவி அலுவலர்கள் இளங்கோவன், ஜனார்த்தனன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.