பரமத்தி பகுதியில் கிரானைட் குவாரி அமைப்பது குறித்த கருத்துகேட்பு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

Update: 2022-11-19 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி பகுதியில் கிரானைட் குவாரி அமைப்பது குறித்த கருத்துகேட்பு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.

கருத்துகேட்பு கூட்டம்

பரமத்தியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கிரானைட் கல் குவாரி அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். பரமத்தி அருகே நடந்தை மற்றும் இருக்கூர் கிராமங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுரங்கத்தின் அங்கீகாரம் காலாவதியானது. இதையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் ஒப்பந்தம் மேற்கொண்டு சுரங்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

அதன்படி மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் குறிப்பு விதிமுறை கடிதம் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தனர்.

மதிப்பீட்டு ஆணையம்

இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சித்ரா, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்