கல்வி கற்பதோடு மட்டுமில்லாமல் மாணவ-மாணவிகள் தனி திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்-உயர் கல்வி வழிகாட்டும் முகாமில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்

Update: 2022-10-20 18:45 GMT

தர்மபுரி:

மாணவ- மாணவிகள் கல்வி கற்பதோடு மட்டுமில்லாமல் தனி திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று உயர்கல்வி வழிகாட்டும் சிறப்பு முகாமில் கலெக்டர் சாந்தி பேசினார்.

உயர் கல்விக்கு வழிகாட்டும் முகாம்

பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் என்ற மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. சிறப்பு முகாமிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.

இந்த முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

மாணவ, மாணவிகள் படிக்கும்போதே தங்களுடைய தனித்திறன்களை மேம்படுத்தி கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகளை பெற்று, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய முடியும். பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தொழிற்கல்விகள் மிக மிக அவசியமாகும். குழந்தைகள் கல்வி கற்க தேவையான முயற்சிகளை பெற்றோர்கள் மேற்கொள்ளவில்லை என்றால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிவிடும். மாணவ- மாணவிகள் கல்வி கற்பதோடு மட்டுமில்லாமல், தங்களுக்கான தனித்திறன்களையும் தொடர்ந்து வளர்த்து கொண்டே வர வேண்டும்.

உடனடி தீர்வுகள்

தமிழக அரசின் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சி மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்கு வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு உடனடி தீர்வுகள் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த முகாமிற்கு எந்த சூழலில் வந்திருந்தாலும், இங்கு வழங்கப்பட்ட தகவல்கள், நீங்கள் திரும்பி வீட்டிற்கு செல்லும்போது உங்கள் உள்ளங்களை ஒளிரச்செய்யும்.

மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை அளித்திட அரசு எண்ணற்ற பல திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி வருகின்றது. சிறந்த ஆசிரியர், ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.

எதிர்கால வாழ்வு

மாணவ, மாணவிகளுக்கு எத்தகைய உயர்கல்வி வாய்ப்பு கிடைத்தாலும், அத்தகைய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொண்டு, கல்வி கற்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு நன்கு படித்தால் எதிர்கால வாழ்வினை சிறந்ததாக அமைத்து கொள்ள முடியும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த முகாமில் கல்லூரி கல்வி இயக்கக தர்மபுரி மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், ஷகில் உள்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்