பொக்காபுரம் கோவில் திருவிழாவுக்காக இயக்கிய சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9½ லட்சம் வசூல்-18 டிரைவர், நடத்துனர்களுக்கு பாராட்டு

பொக்காபுரம் கோவில் திருவிழா நாட்களில் இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் வசூலாகி சாதனை படைத்துள்ளது. இதனால் இரவு பகலாக பணியாற்றிய 18 டிரைவர், நடத்துனர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-11 18:45 GMT

கூடலூர்

பொக்காபுரம் கோவில் திருவிழா நாட்களில் இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் வசூலாகி சாதனை படைத்துள்ளது. இதனால் இரவு பகலாக பணியாற்றிய 18 டிரைவர், நடத்துனர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழா

கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர தேர் திருவிழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்காக கூடலூரில் இருந்து 5 நாட்கள் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இரவு பகலாக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைத்து பஸ்களில் முண்டியடித்து ஏற முடியாத வகையில் பக்தர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் வசூலாகி சாதனை

தொடர்ந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 5 நாட்களில் ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் வசூலாகி சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரவு பகலாக பணியாற்றிய 18 டிரைவர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியதற்காக கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நேற்று பகல் 2 மணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊட்டி மண்டல பொது மேலாளர் நடராசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து கழக வணிக மேலாளர் வாசுதேவன், தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணி, கிளை மேலாளர் அருள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கோவில் விழாவில் சிறப்பு பஸ்கள் இயக்கி சிறப்பாக வசூல் செய்ததற்காக ஜெகநாதன், சின்னசாமி, ரவி உள்பட 18 டிரைவர் நடத்தினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், உதயசூரியன் உட்பட டிரைவர்கள், நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழாவுக்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.7 லட்சத்து 65 ஆயிரம் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டில் 5 நாட்களில் ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்