ஒரு சதவீத அபராதவரி அறிவிப்பால் சொத்து வரி செலுத்த கூட்டம்
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பலர் வரிசையில் நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பலர் வரிசையில் நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
5 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்கள்
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயிக்கப் பட்டு வரி வசூலிக்கப்படுகிறது.
சொத்து வரி 601 முதல் 1,200 சதுர அடி வரை 50 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடிவரை 75 சதவீதம், 1800 சதுர அடிக்கு மேல் 100 சதவீதம், பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதம் என்று கடந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு மூலம் மாநகராட்சிக்கு ரூ.355 கோடி அளவுக்கு வருமானம் வருகிறது.
ஒரு சதவீத அபராத வரி
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தா விட்டால் வரியுடன், ஒரு சதவீத அபராத வரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் ஒரு சதவீத அபராத வரி விதிப்புக்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏப்ரல் முதல் அக்டோபர் மாதத்துக்கான அரையாண்டு சொத்து வரி செலுத்துவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். ஒரு சதவீத அபராத வரியால் பாதிக்கப்படுவதை தடுக்க நேற்று பலர் நீண்ட வரிசையில் நின்று சொத்து வரி செலுத்தினர்.
வரிசையில் நின்று செலுத்தினர்
வழக்கமாக வரி வசூலிக்கும் மையங்களில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால் நேற்று அரையாண்டு வரி செலுத்த கடைசி நாள் என்பதாலும், அபராத வரியை தவிர்ப்பதற்காகவும் பலரும் வரிசையில் காத்து நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
இது குறித்து சொத்துவரி செலுத்தியவர்கள் கூறியதாவது:-
ஏற்கனவே சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ளோம். கடைசி நாள் முடிந்து மறுதினமே வரி செலுத்தினாலும் ஒரு சதவீத அபராத வரி என்பது கூடுதல் சுமையை சுமத்துவதாகும்.
மாநகராட்சி சார்பில் சாலை பணிகள், குடிநீர் பணிகள் என்று அனைத்து பணிகளும் மந்தநிலையில் நடக்கிறது. ஆனால் அபராத வரி வசூலிப்பதில் மட்டும் அவசர கதியில் செயல்படுகிறது. எனவே கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் அபராத வரி வசூலை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
5 சதவீத ஊக்கத்தொகை
இதற்கிடையில் அடுத்த அரையாண்டுக்கான சொத்து வரியை இன்று முதல் வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமை தாரர்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.