சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

Update: 2022-12-28 19:36 GMT

அபராதம் உயர்வு

அந்தப் புதிய வாகனச்சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உள்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

வாகன சோதனை

அறந்தாங்கி விஜயபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்:- அறந்தாங்கி பகுதியில் அவ்வப்போது போலீசார் சாலையில் நின்று கொண்டு வாகனங்களில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை சரிபார்க்கின்றனர். இதில் மது, உரிமம் இல்லாமல் இருப்பவர்களிடம் அபராதம் விதிப்பது வரவேற்க வேண்டிய தான். ஆனால் போலீசாருக்கு அபராத இலக்கு நிர்ணயம் செய்வதால் போலீசார் தினக்கூலிகளிடம் மட்டுமே அபராதம் வசூல் செய்கின்றனர். கார் உள்ளிட்ட விலை உயர்ந்த வாகனங்களை நிறுத்துவது கூட இல்லை. போலீசார் வாகன சோதனையின் போது அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இது வருத்தபட வேண்டிய விஷயம்.

எளிய மக்கள் பாதிப்பு

ஆரியூரை சேர்ந்த சக்திபிரியா:- அபராத தொகையை அதிகரித்து இருப்பதை வரவேற்கிறேன். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் யாரும் இதனால் பாதிக்கப்பட போவதில்லை. மக்கள் இதை கடைபிடிப்பது ஒருபுறம் இருக்கட்டும். போலீசார் இந்த அபராத விதிப்பு நடைமுறையில் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் என எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. பெரும்பாலும் இதுபோன்ற அபராத நடவடிக்கைகளில் எளிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து விதிமீறல் மீதான நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுக்க வேண்டும். அதே நேரத்தில் போலீசார் வாகன தணிக்கை செய்வதை முறையாக செய்ய வேண்டும். பல இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் வாகன பதிவு எண்ணை குறித்து கொண்டு அபராதம் விதிக்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் வாகன எண்ணை தவறாக குறித்துவிட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு பதில் வேறு வாகனங்களுக்கு அபராதம் விதித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தலைக்கவசம் வழங்கலாம்

விராலிமலையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்:- தண்டனை இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட இத்திட்டமானது வரவேற்கத்தக்கது. ஆனால் அபராத தொகையானது மிகவும் அதிகமாக உள்ளது. ஏனென்றால் இத்திட்டமானது சாமானிய மக்களை பாதிக்கும் விதமாக உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, வேண்டுமென்றே போக்குவரத்துக்கு இடையூறாக செல்வது, ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்வது, மோட்டார் சைக்கிளில் மற்ற வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்துவதுபோல் அதிவேகமாக செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக இந்த அபராததொகை என்பது இருக்க வேண்டும். ஆனால் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு வாங்கும் அபராத தொகையை பெற்றுகொண்டு அந்த பணத்திற்கு இணையாக தரமான தலைக்கவசத்தை வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் விபத்துக்களுக்கு காரணம் மோசமான சாலைகள் தான் எனவே அனைத்து இடங்களிலும் தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் சாமானிய மக்கள் பாதிக்காத வகையில் அபராத தொகையை குறைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.

ஆட்டோ டிரைவர்கள் பாதிப்பு

ஆட்டோ தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா:- ''புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை வசதிகள் நல்ல முறையில் உள்ளதா? விபத்தை தடுக்க மற்ற நடவடிக்கைகளை எடுக்காமல் அபராதம் வசூலிப்பதில் மட்டும் அரசின் நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. மோட்டார் வாகன சட்டத்தில் தினமும் போலீசாருக்கு 100 வழக்காவது போட்டு அபராதம் விதிக்க வேண்டும் என ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் உயர்அதிகாரிகள் இலக்கு கொடுக்கின்றனர். அதனால் அவர்கள் ஆங்காங்கே நின்று இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மற்றும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்களை மடக்கி அபராதம் விதிக்கின்றனர். எங்களது சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆட்டோவில் சீருடை சட்டை அணியாமல் டிரைவர் சென்றதற்கு ரூ.500 அபராதம் வசூலித்துள்ளனர். ஒரு வழிப்பாதையில் சென்றதாக ரூ.700 வசூலித்துள்ளனர். மேலும் ஆலங்குடியில் ஒரு ஆட்டோ டிரைவர் பேட்ஜ் லைசென்சு இல்லாததால் ரூ.5 ஆயிரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் வசூலித்துள்ளார். இப்படி பல்வேறு இடங்களில் அபராத தொகையை வசூலிப்பதில் போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர். ஆனால் மணல் லாரி, டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இந்த அபராத தொகை வசூலிப்பை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஏற்கனவே நகர போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அடுத்ததாக பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். புதிய மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறையில் இருந்து திரும்ப பெற வேண்டும்''.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விராலிமலை தாலுகா, ஆவூர் வக்கீல் ராஜா:- தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களே அதிகமான விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், வாகன விபத்துகளை குறைப்பதற்காக தற்போது அபராத தொகை உயர்த்தி இருப்பதால், அப்பாவி மக்களை போக்குவரத்து போலீசார் அபராதம் என்று பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேற்கண்ட திருத்தப்பட்ட சட்டத்தினை போக்குவரத்து போலீசார் சட்ட வழிகாட்டுதலின் படி உரிய சீருடையில், வாகன டிரைவர்களை விரட்டி பிடிக்காமலும், கம்புகளை நீட்டி மிரட்டாமலும், மேலும் அச்சுறுத்தி வாகனத்தின் சாவிகளை பறித்து ஒரு கடும் குற்றவாளிகளை கையாளுவதைப்போல் நடந்து கொள்ள கூடாது என உரிய வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும். கார் டிரைவர் தலைக்கவசம் அணியவில்லை என்றும், இருசக்கர வாகனத்திற்கு சீட் பெல்ட் அணியவில்லை என்றும், மத்திய மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கு சென்னையில் அபராதம் விதிப்பது போன்ற ஏற்றுக் கொள்ள முடியாத தவறுகளை போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர். எனவே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் விபத்தில்லா மாநிலம் தமிழகம் என்கிற நீண்ட கால பயனையும், போலீசார் பொதுமக்கள் நல்லுறவை வளர்க்க முடியும்.

2 ஆயிரம் வழக்குகள் பதிவு

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''போக்குவரத்து விதி மீறல் தொடர்பான உள்ளிட்டவற்றுக்கு புதிய சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகரில் இந்த புதிய விதியின்படி சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வழக்கமான நடைமுறைகளின் படி தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் விதி மீறி செயல்படுபவர்களுக்கு தான் அபராதம் விதிக்கப்படுகிறது''.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்