திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் 835 இடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலமாக 8 ஆயிரத்து 190 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு நேற்று காலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையில் ஏ சான்றிதழ் பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளி ஆகியோர் பங்கேற்றார்கள். அவர்களுக்கு கலந்தாய்வு செய்யப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு பிரிவினருக்கான தகுதிகளை சரிபார்த்தனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 10 பேர் சேர்ந்துள்ளனர். விளையாட்டு பிரிவில் 19 பேர் சேர்ந்துள்ளனர். மொத்தம் 29 பேருக்கு கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. பி.காம் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.