மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்
மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை
மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவிவசாயிகள் கூறியதாவது:-
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். நுண்ணீர் பாசன குழாய் மாற்றக் கோருதல், ஆழ்குழாய் கிணறு அமைத்து தரக்கோருதல், வரத்துக்கால்வாய் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வார கோருதல், சிறுதானியம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க உதவி கோருதல், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கக் கோருதல், கால்நடைகளை பரிசோதிக்கும் ஸ்கேன் எந்திரம் அமைக்கக் கோருதல், கண்மாய் மடைகளை பராமரிப்பு, ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
உரங்கள் இருப்பு வைப்பு
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும். மேலும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் வினியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.