கோவை சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் -அண்ணாமலை பேட்டி
கோவை சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை,
கோவையில் நடந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், பியூஸ் வயர், பேட்டரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதை போலீசார் வெளிப்படையாக சொல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
சம்பவம் நடந்து 24 மணி நேரம் வரை எந்த தகவலையும் தெரிவிக்காத தமிழக போலீசார் அதற்கு பின்பு, காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக கூறி உள்ளனர். இதை சொல்வதற்கு ஏன் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்கொலை படை தாக்குதல்
இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் பயங்கரவாத கும்பலின் சதி என்றும், அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. இதன்பின்பு ஜமேசா முபின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்தும் தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்க மறுத்து வருகிறது. இதற்கான காரணம் தெரியவில்லை.
'ஜமேசா முபின் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், 'எனது இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். எனது குற்றங்களை மறந்துவிடுங்கள்' என்ற பதிவை வைத்துள்ளார். இது, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தற்கொலை படை பயன்படுத்தக்கூடிய வார்த்தை ஆகும். எனவே, கோவையில் நடந்தது தற்கொலை படை தாக்குதல் தான்' என்று பா.ஜ.க. திட்டவட்டமாக தெரிவித்தது.
உளவுத்துறை தோற்றுவிட்டது
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் அவர்களை எந்தெந்த சட்டப்பிரிவில், எதற்காக கைது செய்திருக்கிறோம் என போலீசார் தெரிவிக்கவில்லை. இது, மிகுந்த வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது.
தமிழக காவல்துறை யாரை காப்பாற்ற இந்த சம்பவத்தை மூடி மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை தற்கொலை படை தாக்குதல் நடந்திருந்தால் கோவையின் நிலை என்னவாயிருக்கும்?. அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டு இருக்கும்.
கோவை சம்பவத்தை பொறுத்தமட்டில் தமிழக உளவுத்துறை தோற்றுவிட்டது. தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா?, இன்னும் ஒருவர் இறந்தால் தான் உளவுத்துறை தோற்று விட்டது என்பதை முதல்-அமைச்சர் ஒப்புக்கொள்வாரா?.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு பா.ஜ.க.வுக்கு உள்ளது. கோவையில் நடந்தது தற்கொலை படை தாக்குதல் தான் என்பதை தமிழக அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் எங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லும்அளவுக்கு தமிழக அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதகளின் கலவர பூமியாக கொங்கு பகுதி, குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகள் மாறி வருகிறது. தமிழகத்தை தலைநகராக வைத்து பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் ஊடுருவ முயற்சி செய்கின்றனவா? என்பதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
கோவை சம்பவத்தில் தமிழக போலீசார் மூடி மறைத்த உண்மைகளை மத்திய உள்துறைக்கு கடிதமாக அனுப்பி இருக்கிறோம். இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், தமிழகத்தில் உளவுப்பிரிவுக்கு திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய உள்துறை அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.