கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த ரெயில் 5 மணி 38 நிமிடத்தில் கோவை வந்தடைந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

கோவை

பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த ரெயில் 5 மணி 38 நிமிடத்தில் கோவை வந்தடைந்தது.

வந்தே பாரத் ரெயில்

தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் நீலகிரி, சேரன், இண்டர்சிட்டி, கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய 5 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு நேரத்தில் சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களையும் சேர்த்து கோவை வழியாக சென்னைக்கு 35 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் 8 மணி நேரம் ஆகும்.

இந்த நிலையில் கோவை மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் கோவை-சென்னை வந்தே பாரத் குளுகுளு மற்றும் அதிவேக ரெயிலை வருகிற 8-ந் தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

முதல் வந்தேபாரத் ரெயில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

கோவை- சென்னை வந்தேபாரத் ரெயில் தமிழ்நாட்டுக் குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். இந்த ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதையொட்டி நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

5.38 மணி நேரத்தில் வந்தது

அதன்படி வந்தே பாரத் ரெயில், ரெயில்வே தொழில்நுட்ப அதி காரிகள், ஊழியர்களுடன் 8 பெட்டிகளுடன் நேற்று காலை 5.40 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப் பட்டு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையங்களில் சிறிதுநேரம் நிறுத்தப் பட்டு சரியாக 5 மணி 38 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக கோவை வந்தடைந்தது.

சென்னையில் இருந்து 6 மணி நேரத்துக்குள் இந்த ரெயில் கோவை வந்தடைய வேண்டும். ஆனால் இந்த ரெயில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு 22 நிமிடங்கள் முன்னதாக பகல் 11.18 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தது.

சென்னைக்கு புறப்பட்டது

அதில் இருந்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் இறங்கினார்கள்.

இதையடுத்து கோவை ரெயில் நிலையத்தில் வந்தேபாரத் ரெயிலுக்கு ரெயில்நிலைய மேலாளர் ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

கோவைக்கு வந்த வந்தேபாரத் ரெயில் முன் நின்று ரெயில் நிலைய பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் உள்பட பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் யார்டுக்கு அந்த ரெயில் கொண்டு செல்லப்பட்டு, சிறிது நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. மீண்டும் பகல் 12.24 மணிக்கு சோதனை ஓட்டமாக கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வந்தேபாரத் ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது.

வந்தேபாரத் ரெயில் சேவை குறித்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கூறியதாவது:-

சோதனை ஓட்டம் வெற்றி

தற்போது 8 பெட்டிகளுடன் வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு 22 நிமிடத்துக்கு முன்னதாக கோவை வந்து சேர்ந்தது.

இந்த ரெயில் பெட்டிகள் அனைத்தும் முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 536 பயணிகள் பயணம் செய்யலாம். பிரதமர் மோடி 8-ந்தேதி இந்த ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

அப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு வரும்போது 5 இடங்களில் மட்டும் இந்த ரெயில் நிற்கும். 130 கிலோ மீட்டர் வேகத்துக்குள் இயக்கப்படும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

களைப்பு, அலுப்பு இல்லை

இந்த ரெயிலில் வந்த தொழில்நுட்ப ஊழியர்கள் கூறும்போது, இந்த ரெயிலில் குளுகுளு வசதி உள்ளதால் வெயில் கொளுத்தியது தெரிய வில்லை. மேலும் சென்னையில் இருந்து கோவை வந்த பயண களைப்பு மற்றும் எந்தவித அலுப்பும் தெரியவில்லை. இதை பயணிகளும் உணர்வார்கள். புறப்படும் போது இருந்த அதே புத்துணர்வோடு கோவையில் வந்து இறங்கினோம் என்றனர்.

கோவைக்கு வரப்பிரசாதம்

கொங்கு போரம் அமைப்பு இயக்குனர் சதீஷ்குமார்:-

தொழில்நகரமான கோவையில் வந்தேபாரத் ரெயில் இயக்கப் படுவது தொழில்துறையினர், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வரப்பிரசாதம் ஆகும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.

கோவையில் இருந்து பெங்களூருவுக்கும், கோவையில் இருந்து பழனி, மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்துக்கும் வந்தே பாரத் ரெயிலை இயக்க வலியுறுத்துவோம்.

பயனுள்ளதாக இருக்கும்

ரெயில் பயணிகள் சங்க கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ்:- கோவைக்கு வந்தேபாரத் ரெயில் இயக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது விரைவாக சென்னைக்கு செல்லவும், கோவைக்கு வருவதற்கும் உதவியாக இருக்கும். இந்த ரெயில் 5 இடங்களில் மட்டும் நிறுத்தப்படுவதால் தொழில்துறையினர், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்