கோவை கார் வெடிப்பு சம்பவம்: கவர்னர் பொதுவெளியில் கருத்து சொன்னதை தவிர்த்து இருக்கலாம் - சபாநாயகர் அப்பாவு

“கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கவர்னர் பொதுவெளியில் கருத்து ெசான்னதை தவிர்த்து இருக்கலாம்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2022-10-29 17:15 GMT

தவிர்த்து இருக்கலாம்

நெல்லை மாவட்டம் பணகுடியில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று கவர்னர் கூறிஇருக்கிறார். ஆனால். அவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை.

அவ்வாறு ஆதாரங்கள் கிடைத்து இருந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். அந்த ஆதாரங்களை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கலாம். மேலும் கார் வெடிப்பு பற்றி டுவிட்டர் மற்றும் பொதுவெளியில் கருத்து கூறியிருப்பதை கவர்னர் தவிர்த்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

மேலும், தமிழக அரசு இந்த சம்பவங்களில் விரைந்து செயல்பட்டதாக கவர்னர் ஏற்கனவே பாராட்டி இருக்கிறார். அதன் பின்னரும் அவர் இக்கருத்தை சொல்லி இருக்கிறார். முதல்-அமைச்சரும் இந்த சம்பவத்தை நான்கு நாட்களுக்குள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி உள்ளார்.

பா.ஜ.க.-என்.ஐ.ஏ. இணைந்து பயிற்சி

கடந்த 2019-ல் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை கார் வெடிப்பில் இறந்த முபின் சந்தித்துள்ளார். அவரை போலீஸ் விசாரித்து விட்டு, எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று விட்டுவிட்டனர்.

இப்போதும் கூட ஒரு விமர்சனம் உண்டு. பா.ஜ.க.வும், என்.ஐ.ஏ.யும் இணைந்து முபினுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பியதாக பல பேர் சொல்கிறார்கள்.

ஆனால், இவற்றையெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுபவர்களுக்கு என்ன பதிலோ, அதுதான் கவர்னருக்கும் பதிலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்