கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்திற்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக இரு தூண்களுக்கு இடையே ராட்சத கிரேன் பொருத்தும் பணி

கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்திற்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக இரு தூண்களுக்கு இடையே ராட்சத கிரேன் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-19 18:45 GMT


கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்திற்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக இரு தூண்களுக்கு இடையே ராட்சத கிரேன் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

கோவை-அவினாசி ரோட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்திற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் இதுவரை 275 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு விட்டன.

இதனைதொடர்ந்து கோவை விமான நிலையம், பீளமேடு, லட்சுமி மில் சிக்னல் உள்ளிட்ட இடங்களில் இந்த மேம்பாலத்தில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக அந்தந்த இடங்களில் பிரமாண்ட கான்கிரீட் தூண்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை சிக்னல், பீளமேடு சிக்னல் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நவீன தொழில்நுட்பம்

இந்த அவினாசி ரோடு மேம்பாலம் கட்ட நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி 2 கான்கிரீட் தூண்களுக்கு இடையே பிரமாண்ட கிரேன்கள் பொருத்தப்படுகிறது. பின்னர் இந்த கிரேன்கள் உதவியுடன் தயார் நிலையில் உள்ள கான்கிரீட் தளங்கள் இரும்பு கம்பிகள் உதவியுடன் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதற்காக கோவை லட்சுமி மில் சிக்னல் பகுதியில் உள்ள கான்கிரீட் தூண்களில் ராட்சத கிரேன்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:--

கோவை-அவினாசி ரோடு மேம்பாலம் ரூ.1,600 கோடி செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 17.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தில் 2 தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளம் அமைக்க பீம்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. அதற்கு பதிலாக தயார் நிலையில் உள்ள கான்கிரீட் தரை தளங்கள், 2 தூண்களுக்கு இடையே இந்த ராட்சத கிரேன் உதவியுடன் நிறுவப்படும். பின்னர் அவை இரும்பு கம்பிகள் மூலம் இணைக்கப்படுகிறது.

தற்போது கோவை விமான நிலையம் அருகே இந்த காங்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து லட்சுமி மில் பகுதியிலும் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்குள்ள தூண்களில் கிரேன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்