கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-10 16:06 GMT

வடவள்ளி

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

முதலாம் ஆண்டு மாணவர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருபவர் பழனி. இவருடைய மகன் பிரோதாஸ் குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார்.

பிரோதாஸ் குமாருக்கு இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த பிரிவில் சீட் கிடைக்காததால் பயோ டெக் பிரிவில் சேர்ந்துள்ளார். விரும்பிய பிரிவில் சீட் கிடைக்காததால் பிரோதாஸ் குமார் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு விடுதியில் இருந்த பிரோதாஸ்குமார் வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றார். பின்னர் திடீரென 9.45 மணிக்கு விடுதிக்கு வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடுதியில் உள்ள அறையில் பிரோதாஸ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாய்பாபாகாலனி போலீசார் மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒரு முறை விடுதியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர், மாணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவரின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகும் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்