கோவை தொகுதி அ.தி.மு.க,வேட்பாளர் சொத்து விவரம் என்ன?

கோவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 07:15 GMT

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். அங்கு 100 மீட்டருக்கு முன்பாக ஊர்வலம் நிறைவு பெற்றது.

பின்னர் கார் மூலம் வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்தனர். தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமாரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்தார்.

வேட்புமனு தாக்கலின்போது, அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தனக்கு சொந்தமாக ரூ.1 கோடியே 14 லட்சத்து 902-க்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 65 ஆயிரத்து 520-க்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகவும் கணக்கு தாக்கல் செய்து உள்ளார். இதேபோன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணியும், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கோவை தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்