கோவை: வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி - பெண் கைது

வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.12 ½லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-22 03:24 GMT

கோவை,

தஞ்சாவூர் மரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது28), பாபநாதசம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன்(33) இவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

கோவை பாப்பாநாயக்கன்பாளையம் பகுதியில் ஸ்ரீவிநாயகா சொல்யூசன் என்ற பெயரில் சுபாஷினி(28) என்பவரும், அசோக்குமார் என்பவரும் ஒரு நிறுவனம் நடத்தி வந்தனர்.

அவர்கள் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறியதன்பேரில், ரூ.12 ½ லட்சத்தை ஆன்லைன் மூலம் சுபாசினியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தோம். வேலைக்கான ஆணையையும் வழங்கினார்கள். அதுபோலியானது என்று பின்னர்தான் தெரியவந்தது. எங்களை மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா விசாரணை நடத்தி, நேற்று இரவு சுபாசினியை கைது செய்தார். இடிகரை பாரதி நகரை சேர்ந்த சுபாசினியிடம் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அசோக்குமார் என்ற மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்