கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.2.25 குறைந்தது
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.2.25 குறைந்தது.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.2.25 குறைந்தது.
கொப்பரை தேங்காய் ஏலம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். இங்கு பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வருவார்கள். இந்த ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு கொப்பரையை ஏலம் எடுத்து செல்வார்கள். இந்த நிலையில் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 83 விவசாயிகள் 498 மூட்டை கொப்பரை தேங்காயை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 238 மூட்டை முதல் ரகமாகவும், 260 மூட்டைகள் 2-வது ரகமாகவும் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
விலை குறைவு
ஏலத்தில் தாராபுரம், காங்கேயம், கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இதில் முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.74.20 முதல் ரூ.80.75 வரை ஏலம் போனது. 2-வது ரகம் கிலோவுக்கு 56 ரூபாய் 50 காசுகள் முதல் 71 ரூபாய் 50 காசுகளுக்கு ஏலம் விடப்பட்டது.
கடந்த வாரத்தை விட 83 மூட்டைகள் வரத்து குறைந்து இருந்தபோதிலும், கொப்பரை தேங்காய் கிலோவிற்கு 2 ரூபாய் 25 காசுகள் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தேங்காய் சீசன் தொடக்கம் என்பதால் தேங்காய் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.