கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேதாரண்யம் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-10 18:45 GMT

வேதாரண்யம்:

கடலோர பாதுகாப்பு ஒத்திகை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி மும்பை தாஜ் ஓட்டலில் தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க இந்தியா முழுவதும் சாகர்கவஜ் ஆப்ரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆண்டு தோறும் 2 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

படகில் சென்று கண்காணிப்பு

ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் படகு மூலம் கடலில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சந்தேக நபர்கள்

மீனவர்களிடம் சந்தேகப்படும் வகையில் நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும்(புதன்கிழமை) நடக்கிறது.

நாகை

இதேபோல் நாகை கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 7 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்