செங்கோட்டையில் மின்வாரிய அலுவலகம் மூடல்
மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக செங்கோட்டையில் மின்வாரிய அலுவலகம் மூடப்பட்டு இருந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் பஸ் நிலையம் பகுதி உள்பட பல இடங்களில் நேற்று மின்சாரம் தடைபட்டது. ஒரு சில பகுதியில் குறைந்த அளவில் மின்சாரம் இருந்தது. இதனால் வீடுகளில் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட கருவிகள் மின் அழுத்தம் குறைவின் காரணமாக செயல்படவில்லை. இதுபோல் பல்வேறு முக்கிய இடங்களில் மின் அழுத்தம் குறைவின் காரணமாக வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது. மின்சார வாரிய ஊழியர்கள் ஒட்டு மொத்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக ஊழியர் இல்லாததால் மின் வினியோகத்தை சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றார். மேலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் செங்கோட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் மூடப்பட்டு கிடந்தது.