தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை

நாட்டறம்பள்ளி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை திருப்பித் தரக்கோரி வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-11-14 17:38 GMT

நாட்டறம்பள்ளி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை திருப்பித் தரக்கோரி வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

நிதி நிறுவனம்

நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் 10 மாதத்தில் இரு மடங்கு தருவதாகவும் மேலும் அதிக வட்டி தருவதாகவும் கூறப்பட்டது. இதனால் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தி வந்தனர்.

சுமார் ரூ.10 கோடிக்கு மேல் கட்டியுள்ளனர். நிதி நிறுவனத்தின் மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு ஒரு மாதம் மட்டும் வட்டி வழங்கினர். இரண்டாவது மாதம் வட்டி பணம் கேட்கும் போது இன்று தருகிறோம், நாளை தருகிறோம் என்று கூறி காலம் கடத்தி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பித்தரக் கோரி சில மாதங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர்.

முற்றுகை

அப்போது சில குறிப்பிட்ட தேதியில் பணம் திருப்பித் தருவதாக கூறினார்கள். அதன்படி சில வாடிக்கையாளர்க நேற்று சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு நிதி நிறுவன ஊழியர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து இன்னும் பணம் வரவில்லை என கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பணத்தை திருப்பித் தர கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பணத்தை திருப்பி தருவது குறித்து பத்திரத்தில் கையொப்பமிட்டு தர வேண்டும் என கேட்டனர். அதன்படி நிதி நிறுவன ஊழியர்கள் பத்திரத்தில் கையெழுத்திட்டு, குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் 15-ந்் தேதி திருப்பி தருவதாக கூறியதன் பேரில் அங்கிருந்து வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்