சண்முகநதி பகுதியில் தூய்மைபடுத்தும் பணி

பழனி முருகன் கோவில் சார்பில் சண்முக நதி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-06-03 19:10 GMT

பழனி நகரை ஒட்டி சண்முகநதி பாய்கிறது. இது பழனி சுற்று வட்டார பகுதியில் ஜீவநதியாக உள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், காவடி எடுத்து வரும் பக்தர்கள் ஆகியோர் சண்முகநதியில் புனித நீராடிய பின்னரே பழனி கோவிலுக்கு செல்வது வழக்கம். அதேபோல் சுற்று வட்டார மக்களும் தங்கள் பகுதி கோவில் நிகழ்ச்சிக்கு சண்முகநதியில் இருந்தே தீர்த்தம் எடுத்து செல்கின்றனர். இதுதவிர அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு சண்முகநதியில் வைத்தே தர்ப்பணம் கொடுக்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சண்முகநதி பகுதியில் புனித நீராடிய பின்பு பக்தர்கள் தாங்கள் அணிந்த ஆடைகளை ஆற்றில் அப்படியே விட்டு விடுவதால் குப்பைபோல் தேங்கி காட்சி அளித்தது. மேலும் நீரில் ஆடைகள் தேங்கி நதிநீர் மாசடைவதுடன் அங்கு பாசிகள், ஆகாய தாமரை வளர்ந்து ஆக்கிரமித்து காட்சி அளித்தது. எனவே பழனி சண்முகநதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது சண்முகநதி பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கரை பகுதியில் கிடந்த குப்பைகள், பழைய துணிகள் அகற்றப்பட்டது. மேலும் நீரோட்ட பாதையில் ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகளும் அகற்றப்பட்டு வருகிறது. கோவில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிக்கு பொதுமக்கள், பக்தர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநதி பகுதியில் படித்துறை அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்