கலை பொருளாக மாறும் குப்பைகள்

கீழ்வேளூரில் தூய்மை பணியாளர்கள் குப்பையில் கிடைக்கும் பொருட்களை கலை பொருளாக மாற்றி வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Update: 2023-01-29 18:45 GMT

கீழ்வேளூரில் தூய்மை பணியாளர்கள் குப்பையில் கிடைக்கும் பொருட்களை கலை பொருளாக மாற்றி வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

குப்பை சேகரிப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது. மக்காத, மறுசுழற்சி கழிவுகள் தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது.

கலை பொருட்கள்

இந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் கழிவில் இருந்து கலைப்பொருட்கள் செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதன்படி டயர் மற்றும் தேங்காய் ஓடுகளை கொண்டு கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பாரதி மற்றும் சாந்தி ஆகியோர் பல்வேறு கலை பொருட்களை வடிவமைத்து உள்ளனர். இவர்களுடைய இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

பாராட்டு

குப்பைகளுடன் வரும் தேங்காய் ஓட்டில் இருந்து கொத்து சட்டி, கப் அண்ட் சாசர், பெண் பொம்மைகள், ஜக், பேனா ஸ்டாண்ட், விளக்கு போன்ற கலை பொருட்களை நேர்த்தியான முறையில் அவர்கள் வடிவமைத்து வர்ணம் தீட்டி உள்ளனர்.

மேலும் குப்பையில் வீசப்படும் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைந்து அசத்தி உள்ளனர். தூய்மை பணியாளர்களின் இந்த திறமையை அறிந்த தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் கலை பொருட்களை பார்வையிட்டு பாராட்டினார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்