குளச்சல் கடற்கரையில் தூய்மை பணி
குளச்சல் கடற்கரை பகுதியில் தூய்மை பணியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
குளச்சல் கடற்கரை பகுதியில் தூய்மை பணியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணி
குளச்சல் நகராட்சி சார்பில் குளச்சல் பழைய துறைமுக கடற்கரையோர பகுதியில் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். தூய்மை பணியை தொடங்கி வைத்த பிறகு கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி அந்தந்த துறைகளின் சார்பில் நடைபெற்று வருகிறது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு, மாங்ரோ மரக்கன்றுகள் வளர்ப்பது, சாலையோரம், கடற்கரையோர பகுதி ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்ட பசுமை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பசுமை மாவட்டமாக...
அதன் ஒரு பகுதியாக குளச்சல் பழைய துறைமுக கடற்கரையோர பகுதிளை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தூய்மை பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு தூய்மை பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள். பொதுமக்கள் நமது மாவட்டத்தை குப்பையில்லா குமரி மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாகவும் மாற்ற மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுதிமொழி
முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் குளச்சல் நகராட்சி ஆணையர் விஜயகுமார், கல்குளம் தாசில்தார் கண்ணன், சுற்றுச்சூழல் உதவி செயற்பொறியாளர் பாரதி, நகரங்கள் தூய்மை மக்கள் இயக்கம், புதிய இந்தியா இயக்கம், பேரிடர் கால நண்பர்கள், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.