கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-23 20:49 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பஞ்சாயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ''நம்ம ஊரு சூப்பரு'' என்ற திட்டம் மூலம் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு இந்த பணியை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மை படுத்தி ''நம்ம ஊரு சூப்பரு'' என்ற திட்டத்தில் தூய்மையாக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதுடன், வீட்டில் உள்ள கழிவுநீரை வீட்டு தோட்டத்தில் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் வீட்டில் உறுஞ்சிகுழி அமைக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், துணைத்தலைவர் முரளிதரன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்