தகரக்கொட்டகையில் செயல்படும் வகுப்பறைகள்

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தகரக்கொட்டகையில் வகுப்பறைகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-06-10 15:40 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தகரக்கொட்டகையில் வகுப்பறைகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்த பள்ளி 1984-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதுடன் மாதிரி பள்ளியாகவும் அறிவிக்கப்பட்டது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1,240 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி மாணவா்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பள்ளியில் போதுமான கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தகரக்கொட்டகையில் வகுப்பறைகள்

நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்களுக்கு தகரக்கொட்டகையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் சோ்க்கையை மேற்கொள்ள ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 2011-12-ம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன.

மொத்தம் உள்ள 15 வகுப்பறைகளும் அதிநவீன இணைய சேவை வசதி மற்றும் தொடு திரையுடன் கூடிய டிஜிட்டல் வகுப்பறைகளாக உள்ளன. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள் தகரக்கொட்டகையில் செயல்படுகின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார். கூடுதலாக 28 வகுப்புகள் கட்ட அதிகாரிகள் பரிந்துரை செய்து 3 ஆண்டுகள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடிப்படை வசதிகள்

இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை.விளையாட்டு அரங்கம், கழிப்பறை வசதியும் குறைவான அளவில் உள்ளன. கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இப்பள்ளியையும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்