பஸ்சில் பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்ததாக இருதரப்பினர் இடையே மோதல்

ஆலங்குடி அருகே அரசு பஸ்சில் பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்ததாக இருதரப்பினர் இடைேய ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-11 18:04 GMT

பெண்ணிற்கு மிட்டாய்...

ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சி தெற்குப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் உள்ள பயணிகளுக்கு இனிப்பு வழங்கி உள்ளனர். அப்போது, பஸ்சில் இருந்த வடக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 19) என்பவா் உறவுக்கார பெண்ணிற்கு மிட்டாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

மோதல்

இதையடுத்து மாலையில், ஆலங்குடியில் இருந்து மாங்கோட்டை வழியாக அந்த அரசு பஸ் திரும்பி வந்தது. அப்போது பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்களை ஒரு தரப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

11 பேர் மீது வழக்கு

இதுகுறித்து இரு தரப்பினரும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், வடக்குப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதேபோல் வடக்குப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் அளித்த புகாரின் பேரில் 2 பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீது ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்