கம்யூனிஸ்டு கட்சியினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு

பந்தலூரில் சாலை சீரமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-18 14:36 GMT

பந்தலூர், 

பந்தலூரில் சாலை சீரமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழுதடைந்த சாலை

பந்தலூரில் இருந்து தேவாலா, நாடுகாணி, மரப்பாலம் வழியாக கூடலூருக்கும், மேங்கோரேஞ்ச், சேரம்பாடி வழியாக கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் சுல்தான்பத்தேரிக்கும் சாலை செல்கிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் பந்தலூர் உள்ளதால், இரு மாநிலங்களில் இருந்தும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.

இதற்கிடையே பந்தலூர் பஜாரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து காட்சி அளிக்கிறது. தாசில்தார் குடியிருப்பு, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகேயும் சாலை மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குழிகளில் சிக்கி பழுதடைந்து விடுகின்றன.

ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சாலையை சீரமைக்காததை கண்டித்தும், விரைந்து சீரமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பந்தலூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். உறுப்பினர் குஞ்சு முகமது முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் சாலையில் உள்ள குழிகளில் திடீரென வாழைக்கன்றுகளை நடவு செய்ய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்