பொதுமக்கள் இரவில் திடீர் சாலை மறியல்

ஜோலார்பேட்டை அருகே 4 நாட்களாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 17:40 GMT

டிரான்ஸ்பார்மர் பழுது

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பல்னாங்குப்பம் கூட்ரோடு, வி.ஆர்.வட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாகி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியவில்லை.

இதுகுறித்து ஊராட்சி மன்றத்திற்கும், மின்வாரிய அலுவலகத்திற்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ மின்வாரியத்திற்கு தெரிவித்துள்ளார். ஆனால் இது வரை நடவடிக்கை மேற்கொள்ளாததால் கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் மின் வினியோகம் இல்லாமலும், குடிநீர் கிடைக்காமலும் இருந்து வந்தது.

சாலை மறியல்

இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில், பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மின்வாரிய உதவி இயக்குனர் மற்றும் ஏலகிரி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை இரண்டு நாட்களுக்குள் சீரமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்