கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

தக்கலை அருகே கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-13 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கனிம வளம்

தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு மணல், ஜல்லி போன்ற கனிமவளங்கள் லாரிகள் மூலம் தினமும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமாகவும், அனுமதி இல்லாமலும் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, லாரிகள் பறிமுதலும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளை மக்கள் வசிக்கும் குறுகலான சாலைகள் வழியாக இயக்குவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாரிகள் சிறைபிடிப்பு

இந்தநிலையில் நேற்று காலையில் செம்பருத்திவிளை வழியாக கனிம வளங்களை ஏற்றி கொண்டு லாரிகள் சென்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர்.

அதைதொடர்ந்து கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, துணைத்தலைவர் டேவிட் மற்றும் பொதுமக்கள் கனிம வளம் ஏற்றி சென்ற 5 லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகளை இயக்க கூடாது என லாரி டிைரவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதைதொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்