பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மேல்பாதியில் முதியவர் தாக்கப்பட்ட விஷயத்தில் பொய் புகார் அளித்ததாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-19 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 59). இவர் நேற்று முன்தினம் இரவு கோலியனூர் கூட்டுசாலை அருகில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட சென்றார். அங்கு அவர் நாற்காலியில் உட்கார போகும்போது அதே கடையில் உணவு சாப்பிட வந்த மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (42) என்பவர் அந்த நாற்காலியை இழுத்துவிட்டார்.

இதனால் கலியமூர்த்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதை தட்டிக்கேட்ட கலியமூர்த்தியை, பிரபாகரன், ராஜேந்திரன் (53), முருகன் (48), ஜெயப்பிரகாஷ் (52) உள்ளிட்ட 10 பேர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலியமூர்த்தி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரபாகரன், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார், விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இதை கேள்விப்பட்டதும் பிரபாகரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இரவு 10.30 மணியளவில் மேல்பாதி மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்கள், தங்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வேண்டுமென்றே போலீசில் பொய் புகார் அளித்துள்ளதாக கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த மறியலால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் அங்கு நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்டு இரவு 11.30 மணியளவில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

பதற்றம்- போலீஸ் குவிப்பு

ஏற்கனவே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை கருதி கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதியன்று அக்கோவில் வருவாய்த்துறை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கோவிலை மீண்டும் திறப்பது குறித்து இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும் இதுவரையிலும் சுமூக உடன்பாடு ஏற்படாமல் தோல்வியிலேயே முடிந்து வந்தது. தற்போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்