கார்மல் குழந்தை ஏசு ஆலய தேர்பவனி
தஞ்சையில் கார்மல் குழந்தைஏசு ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதனை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் கார்மல் குழந்தைஏசு ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதனை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தொடங்கி வைத்தார்.
குழந்தை ஏசு ஆலயம்
தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் நிர்மலா நகரில் கார்மல் குழந்தைஏசு ஆலயம் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி குணமளிக்கும் முழு இரவு ஜெபம் நடைபெறும். பவுர்ணமி அன்று குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்காக சிறப்பு ஜெபமும், குழந்தை ஏசுவின் அற்புத தேர் ஆசீரும் வழங்கப்படும்.ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், 11 மணிக்கும், மாலை 5.30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். இந்த ஆலயத்துக்கு மதம், மொழி, இனம் கடந்து அனைவரும் வந்து வழிபாடு செய்வார்கள். புதிதாக பிறந்த குழந்தைகளை குழந்தை ஏசு ஆசீர் தொட்டிலில் இட்டு ஆசீர் பெற்று செல்வார்கள். திருமண தடைகள் நீங்க, குழந்தை வேறு பெற வழிபாடு செய்வார்கள்.
ஆண்டு பெருவிழா
இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலை 6 மணி, 9 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடைபெற்றன. மாலை திருப்பலி முடிந்தவுடன் குழந்தை ஏசுவின் சிறு தேர்பவனியும், அதனை தொடர்ந்து சிறப்பு ஆசீரும் வழங்கப்பட்டன.இதன் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருப்பலி மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் தேரை புனிதம் செய்தார். அதன் பின்னர் புனித தேர்பவனி நடைபெற்றது.
தேர்பவனி
தேர்பவனி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. தேர்பவனியையொட்டி வாண வேடிக்கையும் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மதர் தெரசா அறக்கட்டளை தலைவர் சவரிமுத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அம்புரோஸ், கார்மல் ஏசு அருட்தந்தையர்கள், 3 மணி ஜெப குழுவினர், பவுர்ணமி ஜெபகுழுவினர் செய்திருந்தனர். மதர் தெரசா அறக்கட்டளையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.தேர்பவனி முடிவடைந்ததும் நற்கருணை ஆசீரும், அதனைத்தொடர்ந்து கொடிஇறக்கமும் நடைபெற்றது.