கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரம்
நாகையில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
நாகையில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.
மேலும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் குழந்தை ஏசு, ஆட்டு மந்தை, தேவதூதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெறும். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கட்டி தொங்கவிடுவார்கள்.
ஸ்டார்கள்
குறிப்பாக ஏசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது என்பதால், அதை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். நாகை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், நாகை மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவைகளை அமைத்து வருகின்றனர்.
இதற்காக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய கடைத்தெரு, நாகை கடைத்தெரு, நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல கவர்ச்சியான வண்ணங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
புதிய வரவு
சாதாரண ஸ்டார்கள் ரூ.10 முதல் ரூ.500 வரையில் விற்கப்படுகிறது. வால் ஸ்டார்கள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர எல்.இ.டி. விளக்குகளால் ஆன ஸ்டார் ரூ.150 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக காகித எல்.இ.டி. விளக்குகளால் ஆன ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது நாகை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட வகையான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் கிறிஸ்துமஸ் மரங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்க தேவையான பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரூ.3 ஆயிரம் வரை
குடில் செட் ரூ.260 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிறிஸ்துமஸ் மரம் 1 அடி முதல் 8 அடி உயரம் வரை உள்ளது. மரத்துடன் பால், பெல், ஏசு கிறிஸ்து மற்றும் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
இதே போல் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர எல்.இ.டி. லைட்டுகள், அலங்கார தோரணங்கள், புது வகை கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவைகளும் விற்பனைக்காக வந்துள்ளன.