கிறிஸ்துமஸ் பண்டிகை: 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு அறிவிப்பு!

கிறிஸ்தவர்களின் வீடுகளில் சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2023-12-20 12:16 GMT

சென்னை,

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றில் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைக்கும் பணி, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சனி, ஞாயிறு தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22-ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23-ம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கும், இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்