சூலப்பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழா 64 அடி உயரமுள்ள தூக்குதேரை தோளில் சுமந்தபடி வீதிவந்த பக்தர்கள்

கடையத்தில் உள்ள சூலப்பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழாநடந்தது. இதில் 64 அடி உயரமுள்ள தூக்குதேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி வீதிஉலாவாக சென்றனர்.

Update: 2022-08-17 14:43 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த கடையம் கிராமத்தில் பழமைவாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்குதேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற வேண்டிய தூக்குதேர் திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் சூலப்பிடாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் பிறகு 12-ந் தேதி திருத்தேர் அடிபீடம் அமைத்தல், சிற்றரசூருக்கு கிராம மக்கள் சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து அம்மனை கடையம் கிராமத்திற்கு அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரை சுமந்து சென்ற பக்தர்கள்

விழாவில் நேற்று ஆத்திலியம்மன் கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனை செய்து வருதல், முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து குடை கலசமும், அக்னி சட்டி எடுத்து வருதலும், மாலை 5 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து 64 அடி உயரமுள்ள திருத்தேரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் தோள் மீது சுமந்தபடி பிடாரியம்மன் கோவிலுக்கு தூக்கிச்செல்லுதலும், இரவு 10 மணிக்கு திருக்கல்யாணமும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனை திருத்தேரில் அமர்த்தி திருத்தேர் வீதிஉலாவும் நடைபெற்றது.

இந்த தூக்கு தேரை பக்தர்கள், தோளில் சுமந்தவாறு வீதி, வீதியாக சென்று வந்தனர். இந்த தேர் திருவிழாவில் கடையம், சி.என்.பாளையம், சிற்றரசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்