பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா

பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2023-04-26 20:38 IST

சித்திரை திருவிழா

பழனி மேற்கு ரதவீதியில், லட்சுமி-நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக கோவிலில் 6 கலசங்கள் வைக்கப்பட்டு, கலசபூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்படம், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்றத்தை காண லட்சுமி-நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி பகுதியில் எழுந்தருளினார். பின்னர் கொடிப்படம், உட்பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டு காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பினர்.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

அடுத்த நாள் 3-ந்தேதி தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 16-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டமும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நேற்று நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பிரகாஷ், பழனி கந்தவிலாஸ் நிறுவன உரிமையாளர் செல்வக்குமார், ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்