கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கின ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது

கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கின ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது

Update: 2023-06-19 20:58 GMT

கன்னியாகுமரி:

மீன்பிடி தடைக்காலம் முடிந்து 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கின. வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். அவ்வாறு கரைக்கு திரும்பும் படகுகளில் சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், நெடுவா, திருக்கை, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். தடைக்காலம் என்பதால் அனைத்து விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தயார் நிலையில் இருந்தனர்

இந்தநிலையில் தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், மீன்பிடிக்கச் செல்வதற்கு வலைகளையும் சரி செய்து தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி நள்ளிரவுடன் கிழக்கு கடல் பகுதியில் தடைகாலம் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 15-ந்தேதி அதிகாலையில் கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர்.

வானிலை மையம் எச்சரிக்கை

இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் கடலில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் 18-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

அதிகாலையில் சென்றனர்

இதையடுத்து நேற்று அதிகாலையில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இதற்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டனர். அதன்படி விசைப்படகுகளில் டீசல் நிரப்புவது, குடிநீர், மீன் பதப்படுத்த ஐஸ்கட்டிகள் உள்ளிட்டவற்றை படகில் நிரப்பினர்.

பின்னர், தடைக்கால முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலையில் 300 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் படகில் மின்விளக்குளை எரியவிட்டபடி உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.

சின்னமுட்டம் களைகட்டியது

விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றதை தொடர்ந்து உள்ளூர், வெளியூர் மற்றும் கேரள வியாபாரிகளும் மீன்களை வாங்க சின்னமுட்டத்தில் நேற்று காலை முதல் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைகட்டியது. கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இரவு 8 மணி முதல் கரைக்கு திரும்பினார்கள். அப்போது அவர்கள் வலையில் பெரிய சுறா மீன்கள், பாறை மீன்கள், பண்டாரி மீன்கள், வவ்வர், திருக்கை நெத்திலி மீன்கள் போன்ற ஏராளமான மீன்கள் சிக்கி இருந்தன.

அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

நேற்றைய நிலவரப்படி ரூ.4½ கோடி முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளதாக ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்