பக்தர்களுக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம்
திண்டிவனம் ஆறுமுகபெருமான் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.;
திண்டிவனம்,
திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் அன்ப நாயக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வள்ளி,தெய்வானை சமேத ஆறுமுகபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. பின்னர் இரவு கிடங்கல் அகழி குளக்கரையிலிருந்து சக்தி கலசம் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சக்திவேலுக்கும், காவடிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் நடந்தது. மேலும் சில பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடிக்கப்பட்டது. பின்னர் செடல் ராட்டினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.