முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-12 18:45 GMT

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதிஉதவியும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ். மற்றும் தேசிய சட்ட பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை, முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்களுக்கு அவர்தம் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்காக ஊக்கத்தொகை மற்றும் போர், போரையொத்த நடவடிக்கையில் உயிர்நீத்த, ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு கருணைத்தொகை 2022-2023 முதல் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

அதாவது கல்வி உதவித்தொகையாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும். போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் உயிரிழந்தோரைச் சார்ந்தவர்களுக்கு (மனைவி, பெற்றோர்) கருணைத் தொகையாக ரூ.2 லட்சமும், காயமடைந்த முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.

கல்வி மேம்பாட்டு நிதி

இதேபோல் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ். மற்றும் தேசிய சட்ட பள்ளியில் கல்வி பயிலும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையாக 2022-2023-ம் கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரமும், முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்களுக்கு அவர்தம் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஊக்கத்தொகையாக 2022-2023-ம் கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

எனவே முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் கல்வி மேம்பாட்டு நிதிஉதவி, ஊக்கத்தொகை மற்றும் கருணைத்தொகை பெற்றிட கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவிஇயக்குனர் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142-220732 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்