புதுக்கோட்டையில் தெருநாய் கடிக்கு சிறுவர்கள் அதிகம் பாதிப்பு
புதுக்கோட்டையில் தெருநாய் கடிக்கு சிறுவர்கள் அதிகம் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
விலங்கினங்களில் நன்றியுள்ள ஜீவன் நாய் என அழைக்கப்படுவது உண்டு. நாய்களை வீடுகளில் செல்லப்பிராணிகளாக பலர் வளர்த்து வருகின்றனர். மேலும் தெருநாய்களும் ஆங்காங்கே அதிகம் காணப்படுகிறது.
இதேபோல் நாய்கள் மீது பற்றுக்கொண்டவர்கள் தெரு நாய்களுக்கு உணவளிப்பது, பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை தினமும் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
வெறிநோய் தடுப்பூசி
வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகளை முறையாக அதன் உரிமையாளர்கள் போடுவது உண்டு. இதற்கிடையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் சிலரை கடித்து விடும். இதேபோல் தெருநாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிப்பது உண்டு. இரவு நேரங்களில் சாலையில் நடந்து சென்றால் அங்கு தெரு நாய்கள் கூட்டமாக இருந்து கொண்டு சுற்றித்திரிவதை காணமுடியும்.
ஒரு நாய் குரைக்க ஆரம்பித்ததும், மற்ற நாய்களும் குரைத்து கடிக்க பாயும். இதில் சில நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் கடித்து விடும். இவ்வாறு நாய் கடிக்கு ஆளான நபர்கள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்கு நாடி செல்வது அரசு மருத்துவமனையை தான். அங்கு தான் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை இலவசமாக பெற முடியும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு சிகிச்சை இருந்தாலும் அதற்கான மருந்து, மாத்திரைகள், ஊசிகளுக்கு கட்டணம் அதிகமாகும். இதனால் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை தான் பொதுமக்கள் நாடிச்செல்வார்கள்.
சிறுவர்கள் அதிகம் பாதிப்பு
இந்த நிலையில் புதுக்கோட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. இதேபோல் மாவட்டத்திலும் ஆங்காங்கே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதில் சில இடங்களில் பொதுமக்கள் சிலரை கடித்துள்ளன. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிய கால இடைவெளியில் ஊசி செலுத்தியும், மாத்திரைகளை சாப்பிட்டும் வருகின்றனர்.
இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று விசாரித்த போது அங்கு புறநகர் நோயாளிகள் பிரிவு மையத்தில் பணியில் இருந்த ஒருங்கிணைப்பு அலுவலர் கூறுகையில், ''தற்போது நாய் கடிக்கு அதிகம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிகம் வருவது உண்டு. தெருக்களில் விளையாடும் போது அல்லது நடந்து செல்லும் போது நாய் கடித்ததாக அழைத்துவரப்படுவார்கள். அவர்களுக்கு உரிய ஊசி மற்றும் மருந்து கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேராவது வருவார்கள். இதேபோல் மாலை அல்லது இரவு நேரங்களில் நாய் கடி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்'' என்றார்.
நாய்கடிக்கு ஊசி
நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வரும் கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ்:- ''நான் இருசக்கர வாகனத்தில் வரும் போது தெரு நாய் எனது காலில் கடித்து விட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் ஊசி செலுத்தி வருகிறேன். மொத்தம் இதுவரை 3 ஊசி செலுத்தி உள்ளேன். நாய் கடிக்கான ஊசியானது ஒரே நேரத்தில் 4 அல்லது 5 பேருக்கு சேர்த்து போடப்படும். அந்த ஊசி மருந்து பாட்டிலை திறந்த பின் மீண்டும் வேறுநாளில் வேறொருவருக்கு பயன்படுத்த முடியாது. அதனால் நாய் கடிக்கு ஊசி செலுத்தப்படுகிறவர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே நாளில் வர வைத்து ஊசி செலுத்துகின்றனர்''.
தூக்கம் வருவதில்லை
பூங்கா நகரை சேர்ந்த சுதந்திர தேவி:- ''தெருவில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதை கண்டாலே பயமாக உள்ளது. நாய்கள் தொல்லையால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் அழைத்து செல்வதிலும், வெளியில் அனுப்புவதிலும் சிரமமாக உள்ளது. சில நேரங்களில் குழந்தைகளை கடிக்க பாய்கிறது. தெருவில் புது ஆட்கள் யாரும் வந்தால் விரட்டி கடிக்கிறது. தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் அடிப்பகுதியில் நாய்கள் தங்கி விடுகின்றன. அதில் குட்டிகளை போட்டு வளர்க்கிறது. இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சத்தத்தால் தூக்கம் வருவதில்லை. இதேபோல நாய் ஊளையிடும் சத்தத்தால் மனசு சங்கடமாக இருக்கும். நாய்கள் தொல்லையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
கட்டுப்படுத்த வேண்டும்
சமூக ஆர்வலர் முத்துராமலிங்கம்:- ''புதுக்கோட்டை நகரப்பகுதியில் மட்டுமில்லாமல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக புதுக்கோட்டை டவுனில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குறுக்கே வருவதும், தெருக்களில் செல்லும் போது குரைத்துக்கொண்டு விரட்டி வந்து கடிப்பதுமாக உள்ளது. ஒரு சில நாய்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெருநாய்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடித்து வேறு இடத்தில் விட்டனர். மேலும் நாய்கள் இனப்பெருக்கம் தடைசெய்யப்பட்டது. தற்போது உள்ள தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்''. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.