குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முகாம்
அரகண்டநல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவரும், குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைவருமான வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். குழந்தைகள் நல பாதுகாப்பு செயலாளரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான ஆர்.சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதீஜாபிவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் அனைவரையும் வரவேற்றார். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் தாஸ், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள் குமார், ரமேஷ், காமராஜ், சரவணன், இளைஞர் நலக்குழு தினகரன், மகளிர் நலக்குழு சாந்தி, நலக்குழு உறுப்பினர்கள் செந்தமிழன், துரை, விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர குழந்தைகள் பாதுகாப்பு பிரதிநிதி சிங்க.ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.