கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை மூச்சுத்திணறடித்து கொன்ற கொடூரம்
வலங்கைமான் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை சாக்குப்பையில் வைத்து மூச்சுத்திணறடித்து கொன்ற கொடூரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.;
வலங்கைமான் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை சாக்குப்பையில் வைத்து மூச்சுத்திணறடித்து கொன்ற கொடூரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வேடம்பூர் தோப்புத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி ரேவதி (வயது 53). இவர்களுடைய மூத்த மகள் ரேணுகா(33). இவருக்கும், நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
ரேணுகாவின் கணவர் கடந்த 7 ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதனால் ரேணுகா, 3 குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். ரேணுகா குடவாசலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் மாயம்
இதனால் கர்ப்பம் அடைந்த ரேணுகாவுக்கு கடந்த 22-ந் தேதி திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் இருந்து ரேணுகா திடீரென மாயமானார். பிரசவம் முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பே அவர் மாயமானது குறித்து ஆஸ்பத்திரி மூலமாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ரேணுகாவுக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதும், அதன் உடல் அவருடைய வீட்டின் பின் பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குழந்ைத கொன்று புதைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
தாய்-பாட்டியிடம் விசாரணை
மேலும் தலைமறைவான ரேணுகாவையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தங்களுடைய கிராமத்துக்கு வந்த ரேணுகா மற்றும் அவருடைய தாயார் ரேவதி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாமல் சாக்குப்பையில் வைத்து ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்துச்சென்று, குழந்தைக்கு மூச்சுத்திணறடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
மூச்சுத்திணறடித்து கொலை
இதுதொடர்பாக ரேணுகா, அவருடைய தாய் ரேவதி ஆகிய இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், 'தகாத உறவில் கர்ப்பம் அடைந்த ரேணுகாவுக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. தகாத உறவில் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி அந்த குழந்தையை கொலை செய்ய ரேணுகாவும், அவருடைய தாயார் ரேவதியும் (குழந்தையின் பாட்டி) திட்டமிட்டனர்.
அதன்படி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பே யாருக்கும் தெரியாமல் குழந்தையை சாக்குப்பையில் எடுத்துச்சென்று மூச்சுத்திணறடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவர்கள் குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
தாய்-பாட்டி கைது
இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரேணுகா, அவருடைய தாய் ரேவதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரேணுகாவின் கள்ளக்காதலன் கமலேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை சாக்குப்பையில் வைத்து மூச்சுத்திணறடித்து தாயே கொன்ற கொடூரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.