தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு
தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் தொழிலாளர் துணை கமிஷனர் லிங்கம் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் சங்கீதா, மதுரை மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
சைல்டுலைன் அமைப்பு மூலமாக குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆட்டோக்கள், வாடகை கார்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. முடிவில், உதவி கமிஷனர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்று, 14 வயது உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்த பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம், பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து போட்டனர். இதில் குழந்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சிவசங்கரி மற்றும் துணை வட்டாட்சியர் மாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.