சேலத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை-பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு

சேலத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா ஆய்வு செய்தார்.

Update: 2023-02-13 21:13 GMT

முதல்-அமைச்சர் வருகை

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, அவர் முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து சேலம் மண்டல அளவில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சேலம் வருகிறார். நாளை மாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் காவல்துறை அதிகாரி கள் ஆய்வுக் கூட்டத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆய்வுக்கூட்டம் நடக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதல்-அமைச்சர் செல்லும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

மேலும், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, முதல்-அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்