முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2023-03-31 23:07 GMT

சென்னை,

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி, 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி டி.கே.மாதவன் போராட்டத்தை தொடங்கினார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

எனவே தலைவர்கள் இல்லாமல் போராட்டம் தத்தளித்தது. கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். அங்கு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு பெரியார் அழைத்துச் சென்று, வைக்கம் வீரர் என்ற பட்டப் பெயரையும் பெற்றார்.

இன்று பயணம்

தற்போது இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளஅரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன்படி இந்த நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கேரளா கொச்சிக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு கொச்சியில் இருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்