அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

83 ஆயிரத்து 462 சதுரடி பரப்புடைய மிக பிரமாண்டமான கட்டிடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-24 05:17 GMT

மதுரை,

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக (3.2.2023) அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18.3.2023 அன்று கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் 3 அடுக்கு பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன் கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83 ஆயிரத்து 462 சதுரடி பரப்புடைய மிக பிரமாண்டமான கட்டிடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு நேரில் சென்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்