அரியலூர், ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் நவீன தொழில்நுட்ப மையங்கள்-முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
அரியலூர், ஆண்டிமடத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களில் தலா ரூ.34.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நவீன தொழில்நுட்ப மையங்கள்
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை திட்டத்தின் கீழ் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தலா ரூ.34.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அதிநவீன 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அரியலூர் அரசு ஐ.டி.ஐ. தொழில்நுட்ப மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ. தொழில்நுட்ப மையத்தில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
மிகவும் பயனுள்ளதாக அமையும்
இந்த அதி நவீன தொழில்நுட்ப மையத்தில் மேனுபாக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் டெக்னீசியன் ஆகிய ஒரு வருட தொழிற்பிரிவுகளும், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகள் ஆகிய 2 வருட தொழிற்பிரிவுகளும், ஐ.ஓ.டி., பிராசஸ் கண்ட்ரோல், பிராடக்ட் டிசைன், ஆட்டோ எலக்ட்ரிக் மெயின்டனன்ஸ், அட்வான்ஸ்டு பெயிண்டிங் போன்ற 23 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
இதுநாள் வரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை தொழிற்பிரிவுகளில் மட்டுமே பயிற்சி பெற்று வந்த பயிற்சியாளர்கள் இனிவரும் காலங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி பெறும் வகையில் இந்த அதிநவீன தொழில்நுட்ப மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.